சென்னை: பிரபல யூடியூப் சேனல் உட்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் வி.ஜே நிக்கி(26). சூளைமேடு பகுதியை சேர்ந்த நிக்கி நேற்று புரசைவாக்கத்தில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காக காரில் சென்ற போது தகராறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் அளித்த தகவலின் படி, புரசைவாக்கம் பார்த்தசாரதிபுரம் வழியாக சென்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வழிவிடாமல் நின்றதாக கூறப்படுகிறது. பல முறை ஹார்ன் அடித்தும் வழிவிடாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த வீ.ஜே நிக்கி கீழே இறங்கி வாகன ஓட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வாக்குவாதம் முற்றியதில் வீ.ஜே நிக்கி அந்த நபரை தாக்கியுள்ளார்.
பின்பு ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிக்கியின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதை கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த மோதலில் காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வேப்பேரி காவல் நிலையத்தில் ஒருவர்மேல் ஒருவர் புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மற்றொருவர் வழக்கறிஞரிடம் கணக்காளராக வேலை பார்த்து வரும் ஓட்டேரியை சேர்ந்த ராஜேஷ்(31) என்பது தெரிய வந்துள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2500 சிம் கார்டுகள் பதுக்கல்; BSNL-க்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தம்பதிக்கு வலைவீச்சு!