தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடந்தது. இதில், பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், `தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் பண பலத்தை தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். இருந்தபோதும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பண பட்டுவாடா நடந்தது.
பல தொகுதிகளில் நடந்த பண பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்` எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பண பட்டுவாடா நடந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
மேலும், பண பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் ஏப் -20ஆம் தேதி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க உயர் நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது.
விளம்பரத்திற்காக கிருஷ்ணசாமி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இனி இது போன்று காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர்.