சென்னை: காவிரி ஆற்றில் மருந்துப் பொருள்கள் கலந்து ஆற்றுநீர் மாசடைவது குறித்து மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் நீர் தொழில் நுட்பப் பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), சென்னை குழு ஆய்வு நடத்தியது.
ஆலோசனைக் கூட்டம்
இது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று (அக்.13) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தொழில்நுட்பக் கழகம் விளக்கம்
இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தங்களின் ஆய்வு குறித்த விரிவான விளக்கத்தை அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வின்போது ”தற்போது காவிரி ஆற்றில் கலந்துள்ள மருந்துப் பொருள்கள், மக்களுக்காக மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் அளவினைவிட மிகமிகக் குறைந்த அளவில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது” என சுற்றுச்சூழல் நல பொறியியல்துறை பேராசிரியர் ச.சங்கர் எடுத்துரைத்தார்.
மேலும் தற்போது அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள மருந்துப் பொருள்களையும் ஆய்வு செய்வது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆய்வு
அவரைத் தொடர்ந்து ஜிலென்ஸ் இன்னோவேஸன் லேப்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் முதன்மைத் தொழில்நுட்ப இயக்குநர் சுரேஷ், ஆற்றுநீரில் இம்மருந்துப் பொருள்களுடன் நகராட்சிக் கழிவுகளும் கலப்பதால் மாசு ஏற்படுகிறதா என்பதை உறுதி செய்யவும், நேரடியாக மருந்துப் பொருள்களாக ஆய்வு செய்யாமல், அவை உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தினால் உருவாகும் வேதிக் கலவைகளையும் கருத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மல்லாடி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த முருகன், ”ஆற்றில் இம்மருந்துப் பொருள்கள் கலந்துள்ள அளவினை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்ய, தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களை விட நவீன வகை உபகரணங்களை பயன்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.
நதிகள் பாதுகாப்பு
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், ”முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இயங்கி வரும் தற்போதைய அரசு தமிழ்நாட்டில் உள்ள நதிகளை பாதுகாப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் காவிரி நதி நீர் பாதுகாப்பு கருதி இந்தியத் தொழில்நுட்ப கழகம் இந்த ஆய்வினை மேற்கொண்டதற்காக பாராட்டுகள்.
ஆய்வில் குறிப்பிடப்பட்ட மருந்துக் காரணிகள் ஆற்றில் மிகமிகக் குறைந்த அளவில் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத அளவில் இருந்தாலும் புதிய முயற்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ஒரு சிறப்பம்சம். மேலும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து பல்வேறு மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட வல்லுநர்களுடன் கூடிய ஒரு உயர்மட்ட குழு அமைத்து காவிரி ஆற்றினை தொடர்ந்து கண்காணித்து, அதை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு இந்த ஆய்வினை மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர வேண்டும்” என்றார்.
மருந்து கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு
மேலும், மனிதர்கள் நோய் தீர்ப்பதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் மனிதக் கழிவுகளிலிருந்து வெளியேறி, உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீருடன் நீர் நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள மருந்துப் பொருள்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுடன் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மருந்தகங்களில் காலாவதியான மருந்துப் பொருள்களை குப்பைக் கிடங்குகளிலிருந்து வெளியேற்றாமல் சேகரித்தும், மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாத மருந்துப் பொருள்களை மீண்டும் மருந்தகங்களில் இருந்து பெறப்பட்டு, தொழிற்சாலைகளுக்கே திரும்ப அனுப்பப்பட்டு முறையாக அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதற்காக தமிழ்நாட்டுக்கான தனி ’மருந்து பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை கொள்கை’ உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி