தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாடு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் முதலமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- வெள்ளம் வருவதற்கு முன்,
- வெள்ளம் வரும்போது,
- வெள்ளம் வந்த பின்பு
என மூன்று காலங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி 17 ஆயிரத்து 866 தடுப்பணைகள், 14 ஆயிரத்து 946 கசிவுநீர்க் குட்டைகள், ஒன்பதாயிரத்து 780 செறிவூட்டும் கிணறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆறுகள், நீர்த்தேக்கங்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எட்டாயிரத்து 711 கால்நடை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
காவிரி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம். வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் செல்ஃபி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்தப் பருவமழை காலத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாடு அரசு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
இதையும் படிங்க: 11 கிலோ கஞ்சாவுடன் திருநங்கை அதிரடி கைது!