சென்னை: தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பட்டியல் சமர்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று (பிப்.15) மீண்டும் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும் என்றும், சினிமா டிக்கெட் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான அஜீத்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் நல்வரவேற்பை பெற்றது. இந்த படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. அதோடு விதிமுறைகளை மீறி நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆகமங்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகனார் நியமனத்திற்கு இடைக்காலத் தடை