சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, காவல்துறை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில், "சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது தான்.பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரமும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் வாதிடுகையில், "நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்.எஸ்.எஸ் தெரிவித்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பிறகும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைக்கு பின்னரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டது.
எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணபித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்" என கூறப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (பிப்.10) தீர்ப்பளித்த நீதிபதிகள், "சுற்றுச்சுவருடன் கூடிய பகுதிகளில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் நகைக்கடை ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்கம் கொள்ளை!