சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுதினர்.
தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் தேர்வு எழுத 3,976 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. புதுச்சேரியை பொறுத்தவரை 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனித்தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுதினர்.
இதனிடையே, கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவிற்கான 4, 5, 6 கேள்விக்கான விடையில் Synonyms, antonyms இரண்டும் உள்ளது. இது மாணவர்களுக்கு சிரமத்தினை ஏற்படுத்தியது. அதேபோல் 2 மதிப்பெண்ணில் வினா எண் 28 தவறாக இருந்தது என புகார் எழுந்தது.
இதையும் படிங்க: ‘பிடிஆர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்’ - விபி துரைசாமி!
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத்துறை இயக்குநருக்கு. இந்த வினாக்களுக்கு விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளதால் அதற்குரிய மாதிரி விடைகள் திருத்தும் மையங்களுக்கு அரசு தேர்வு துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு மதிப்பெண் வினாவில் நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண்களும், இரண்டு மதிப்பெண் வினாவில் 28-ஆவது கேள்விக்கு விடை எழுதிய மாணவர்களுக்கு இரண்டு மதிப்பெண்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் வினா எண் 7 மற்றும் 13 ஆகியவற்றில் இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்து இருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு மாணவர்களுக்கு விடைத்தாளில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்டரி ரேமண்ட் கூறும்போது, "மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்களின் கோரிக்கையை ஏற்று மதிப்பெண்களை வழங்க அரசு தேர்வு துறைக்கு நன்றி" எனக் கூறினார்.