சென்னை: அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர், பல்வீர் சிங். இவர் குற்றச்செயல்களில் ஈடுபடும் விசாரணைக் கைதிகளின் பற்களை கட்டிங் பிளேயரால் பிடுங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதனால் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் பற்றி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அதிகம் பேசப்பட்டது மற்றும் பகிரப்பட்டது. மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: கேரள பழங்குடி இளைஞர் அடித்துக் கொலை வழக்கு - 14 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்!
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ் அசோசியேஷன் தலைவர் ஆபாஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடுவதால் ஆதாரங்கள், சாட்சியங்கள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பொது மக்களை பாதிக்கும் வகையில் பிரசாரம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் பரப்பப்படுவதால் விசாரணைகள் தடைபடுவதாகவும், விசாரணை முடிந்து நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரத்தை ஊடகத்தில் உள்நோக்கத்துடன் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவரும் அதன் இயக்குநருமான ஆபாஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார், ரேஷன் அட்டைகளை வீசிவிட்டு சென்ற மக்கள்.. தருமபுரியில் நடந்தது என்ன?