சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு, பழங்குடியின அந்தஸ்து வழங்க கூடாது என குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக நடந்து வரும் இந்த வன்முறையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 19 புதன்கிழமை அன்று இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 26 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பல ஆண்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடுவே ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்று இருந்தது. இதற்கு அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பொதுமக்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபரை முதலில் மணிப்பூர் மாநில காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அந்த ஸ்டேட்டஸ் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களையும் சாடிமாறு அமைந்து உள்ளது. அதில் “எங்கே போனார்கள்? அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன், லிட்டில் சூப்பர் ஸ்டார், நற்பணி நாயகன், மக்கள் செல்வன், சீயான், சின்ன ரஜினி” என அனைவரையும் வம்புக்கு இழுத்து உள்ளார். அது மட்டுமின்றி “மறந்தும் கூட உங்கள் குடும்பத்தார் உடன் படப்பிடிப்புக்கு மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று விடாதீர்கள். இதுவே என் எச்சரிக்கை” என்று கூறி இறுதியில் அன்புடன் அமீர் என்று பதிவிட்டு உள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இதுவரை தமிழ் முன்னணி நடிகர்கள் யாருமே எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுவே இயக்குநர் அமீரின் இந்த பதிவுக்கு காரணமாக அமைந்து உள்ளது பலர் கூறி உள்ளனர். இயக்குநர் அமீர் எப்போதுமே அரசியல் கருத்துகளை காட்டமாக பதிவு செய்பவர். மணிப்பூர் சம்பவத்தில் தமிழ் நடிகர்கள் பலரும் வாய் திறக்கவில்லை என்பதால் இப்படி பதிவிட்டு உள்ளார். மணிப்பூர் விவகாரமாக இயக்குநர் அமீர் தமிழ் நடிகர்களை சாடிய நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: "பெண் குடியரசு தலைவராக இருக்கும் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - மாதர் சங்கம் ஆவேசம்!