தேனி மாவட்டம் பொட்டிபுரம், அம்பரப்பர் மலைகளில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த 'சாதாரண கட்டிடம் கட்டும்' பிரிவின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியது. எனவே இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் தற்போது இவ்வழக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் படி, நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது. ஆனால், அந்த அதிகாரத்தை பறித்து 'சிறப்புத் திட்டம்' என்ற பெயரில், மத்திய அரசு தானே ஒரு அனுமதியை அளித்திருந்தது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு அனுமதித்ததுடன், மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அமமுக கட்சியின் துணப்பொதுச்செயலாளர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், நியூட்ரினோ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அரிய வகை விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் சூழல் முற்றிலும் அழிந்து போய்விடும். ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வியல் பாதிக்கும் என்பதால் தேனி மாவட்ட மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.
இந்த எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு சட்டவிரோதமாக சில அனுமதிகளை அளித்தபோது அதை வேடிக்கைப் பார்த்தது எடப்பாடி பழனிசாமியின் அரசு. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள உணர்வில் சிறிதளவேனும் எடப்பாடியின் அரசு ஆர்வம் காட்டியிருந்தால் நல்லது நடந்திருக்கும். இனிதாவது எடப்பாடி பழனிசாமி அரசு தேனி மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நியூட்ரினோ திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதைவிடுத்து மக்களை துச்சமாக மதிக்கும் தங்களது இயல்பான போக்கை இப்போதும் தொடர்ந்தாலோ, மத்திய அரசிற்கு சேவகம் செய்யும் தங்கள் வழக்கத்தை இந்த விஷயத்திலும் கடைபிடித்தாலோ தேனி மாவட்ட மக்கள் ஒரு போதும் அவர்களை மன்னிக்கமாட்டார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று தினகரன் எச்சரித்துள்ளார்.