சென்னை: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பானது ஏழை, எளிய மக்களுக்கு சிறுநீரக சிகிச்சைகள் தொடர்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பானது, ஆண்டுதோறும் சிறுநீரக சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடத்தி வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டும் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் 25 கி.மீ., 50 கி.மீ., மற்றும் 100 கி.மீ. என்ற தூரத்திற்கு என மூன்று பிரிவுகளில் சைக்கிள் பேரணிக்கு (நவ.13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மகாபலிபுரம் சென்று மீண்டும் மயிலாப்பூர் வரையில் 100 கி.மீ தொலைவிற்கு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதில், அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்த சைக்கிள் பேரணியில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இந்த சைக்கிள் பேரணியில் டிஜிபியுடன் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக, சென்னை முழுவதும் இரவு விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில், மழையைப் பொருட்படுத்தாமல் டிஜிபி சைலேந்திரபாபு உற்சாகத்துடன் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: மழை: இன்று சென்னையில் ஆய்வுசெய்த CM; நாளை டெல்டா பகுதிகளுக்கு விஜயம்