மக்களவைத் தேர்தல், மற்றும் தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து காலியாக இருந்த அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளும் முன் வைத்தன. மேலும் இதுதொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மக்களவைத் தேர்தலுடன் மீதம் இருக்கும் நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அவர்கள் அரசியல் வாழ்க்கை பற்றிய சிறு தொகுப்பு.
அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி, பின்னர் 2000ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர், செயலாளர் என பொறுப்புகளைப் பெற்ற அவர் முதன்முறையாக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூரில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார். பின்னர் 2011ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்த செந்தில் பாலாஜி, அவரது மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் அவர் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அமமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன்
மதிமுகவில் தொடங்கிய டாக்டர் சரவணனின் அரசியல் பயணம், தற்போது திமுகவில் நிலை கொண்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ்-ன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். தற்போது மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சூலுர் - பொங்கலூர் பழனிசாமி
பொங்கலூர் தொகுதியில் இருந்து முதன்முறையாக 1971ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். முன்னதாக இவர் 2006ஆம் ஆண்டு கோவை கிழக்குத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார். கடந்த சில காலங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பொங்கலூர் பழனிசாமி தற்போது சூலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ளார்.
ஒட்டப்பிடாரம் - எம்.சி.சண்முகையா
ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.சி.சண்முகையா வழக்கறிஞராவார்.