சென்னை: இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே நமது அரசின் நிலைப்பாடு, 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, 28 கோடி மதிப்பில் மருந்து, 15 கோடியில் பால் பொருட்களை நாம் வழங்க நினைக்கிறோம்.
ஆனால், ஒன்றிய அரசின் அனுமதியோடுதான் இதனை நாம் அனுப்ப முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தனர்.
அதன் பின் பேசிய பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அதேபோல் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ளதாக தெரிவித்தார். பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தனது குடும்ப நிதியிலிருந்து 50 லட்ச ரூபாயை அளிப்பதாகவும் பேரவையில் தெரிவித்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.