சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் (5 .8 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) பகுதிவரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
லேசானது முதல் மிதமான மழை
நாளை (டிசம்பர் 1 ) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 2 ஆம் தேதி மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
கடந்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வீரபாண்டி (தேனி) 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அந்தமான் கடல்பகுதிகளை வந்தடையும். மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிசம்பர் 2 ஆம் தேதி வலுப்பெறக்கூடும். அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி மேலும் வலுப்பெற்று புயலாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல்பகுதிகளை கரையைக் கடக்க கூடும்.
இதேபோல் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மகாராஷ்டிரா கடல் பகுதிகளை ஒட்டி நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இந்த 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதியாலும் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இல்லை. மீனவர்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
டிசம்பர் 2 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சூறாவளி காற்று
டிசம்பர் 3ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 4ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
அரபிக்கடல் பகுதிகள் இன்றும், நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என தெரிவித்தார்.
சென்னையில் மழைப் பதிவு
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த புவியரசன், "வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை இல்லை. இன்றும், நாளையும் மழை இருக்கும். வரும் நாள்களில் மழை முற்றிலும் குறையத் தொடங்கும். வடகிழக்கு பருவமழை கணக்கீடு காலத்தின் படி, அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 65 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவான 36 செ.மீ-ஐ விட 83 விழுக்காடு அதிகம். இதே போல் சென்னையில் 115 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவான 62 செ.மீ-ஐ விட அதிகம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை