சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட உள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்குத் தினமும் மாலை நேரங்களில் கற்பிக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும் தன்னார்வலர்களாக தேர்வுசெய்யப்பட்டு கற்பிக்க உள்ளனர்.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கான இணையதளத்தின் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 972 பேர் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர், இந்தப் பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.
மாநில அளவில் பதிவு செய்துள்ள தன்னார்வலர்களில் தரவுகளை ஆய்வு செய்தபின்னர் பெண்களுக்கு முன்னுரிமை, கல்வித்தகுதி, முகவரி இதர தகவல்கள் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதனைப் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் சரிபார்த்து தன்னார்வலர் தேர்வு செய்யப்பட வேண்டும். அவர் 'இல்லம் தேடி கல்வி மையம்' அமைந்துள்ள குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவராக இருத்தல் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்டப் பிற தகுதிகளையும் சரிபார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
மையத்திற்கு வரும் குழந்தைகளை சாதி, மதம், பாலினம் என பாகுபடுத்தாமல் விருப்பு, வெறுப்பின்றி சமமாக கருதுபவராக இருக்க வேண்டும்.
தன்னார்வலர்களுக்குப் பேச்சு, விவாதிக்கும் ஆர்வம், குழு விவாதம் மூலம் சோதனை செய்யப்படும். பின்னர் மாவட்டக்குழுவின் மூலம் தன்னார்வலர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்படும்' என அதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ’இல்லம் தேடி கல்வி திட்டம்’ - 568 முனைவர்கள் விண்ணப்பம்!