சென்னை: மருத்துவப்படிப்பு கலந்தாய்விற்கு இன்று வந்த 2 மாணவர்களின் இருப்பிட சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை கலந்தாய்வில் பங்கேற்க விடாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 473 மாணவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று(டிசம்பர் 2) நடைபெற்ற கலந்தாய்விற்கு 499 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கலந்தாய்வில் 485 மாணவர்கள் பங்கேற்றனர். 14 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 431 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 41 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம் என மொத்தம் 473 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 10 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,222 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 996 இடங்களும்,பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் காலியாக உள்ளன. மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு இன்று வந்த 2 மாணவர்களின் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்ததால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்களில் இதுவரை இருப்பிடச் சான்றிதழ் சந்தேகம் என 10 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர் என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி துணை இயக்குனர், சட்டம் சார்ந்த மருத்துவர்கள், வட்டாட்சியர் என ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சந்தேகப்படும் மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் ஆய்வு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவக் கலந்தாய்வு - எட்டு மாணவர்கள் இருப்பிட சான்றிதழில் சந்தேகம்!