சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டினம்பாக்கம் சீனிவாசன் நகர் பகுதியில் இன்று நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மழைக்கால சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
அதேபோல், பொது சுகாதாரத்துறையின் சார்பில் 3 பேருக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு முகாம் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பட்டினம்பாக்கம் சீனிவாசன் நகர் பகுதியில் இன்று நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மழைக்கால சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் 1,000 முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு மூன்று வீதம் 45 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ முகாம்களை பொதுமக்கள் அணைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை மநாகராட்சியில் 1 முதல் 15 மண்டலங்களிலும் ஜுன் 2023 முதல் இதுநாள் வரை 3,962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,33,589 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மேலும், சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு பள்ளி இறைவணக்கத்தின்போது டெங்கு விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றியும், ஏடிஸ் கொசு உற்பத்தி பற்றியும், அதனை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும், துண்டுபிரசுரங்கள் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு மற்றும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பகுப்பாய்வு கூடங்களில் காய்ச்சல் கண்டவர்களின் விபரங்கள் பொது சுகாதாரத் துறையால் தினந்தோறும் பெறப்பட்டு, சம்பந்தபட்ட மண்டலங்களுக்கு அனுப்பி, உரிய சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கொசுத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதும் முறையாக கண்காணிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் கைதிகளுக்கு செல்போன் வழங்கியதாக சிறைக்காவலர் சஸ்பெண்ட்!