சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் வீட்டிற்கு சென்ற பிளஸ் 1 மாணவியை வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதால் பயந்து பைக்கில் வேகமாக சென்ற மாணவி கீழே விழுந்து தலை, கன்னத்தில் காயமடைந்தார். உடன் பயணித்த அவரது சகோரரிக்கும் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதால், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தெரு நாய்கள் தொல்லைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகத்தின் நுழைவாயலில் வெறி நாய்களை கட்டுபடுத்தக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
பின்பு புகார் மனுவை அதிகாரிகளிடம் கொடுப்பதற்காக நாய்களைப் போல குரைத்துக் கொண்டு சென்றனர். இதனால் அலுவலக வளாகத்தில் இருந்த நாய்கள் இவர்களை பார்த்து குறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடியின் கீழ் கோரிக்கை மனுவை வைத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
முன்னதாக, தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டு குரோம்பேட்டை சுபாஷ் நகர் விஸ்வேஸ்வரா தெருவில் பள்ளி சிறுமியை தெருநாய் ஒன்று துரத்தியாதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாய்களின் இனக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் நாய்கள் காப்பகம் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் இது போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மொடச்சூர் வாரச்சந்தையில் வசித்து வந்த நரிக்குறவர்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு!