சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 624 ரூபாய் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையை முற்றுகையிடுவதற்காக கடந்த 7ஆம் தேதி ஒன்று கூடினர்.
ஆனால், காவல் துறை தடுத்ததால் அருகிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே சென்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தொடர்ந்து திருமண மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மாநகராட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்களை மாநகராட்சி பணி நீக்கம் மற்றும் நிரந்தர பணியாளர்களிடம் விளக்கம் கேட்டும் படியும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக 15 மண்டலங்களுக்கும் மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்றை மாநகராட்சி அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில்
"மண்டல வாரியாக போராட்டத்தில் கலந்துகொண்ட நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்வ தொடர்பான விவரங்களை மாநகராட்சி 'Realtimegovernance@GCC' வாட்ஸ்அப் குழுவில் அனுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி பணியாளர் " இந்த சுற்றறிக்கையை காரணமாக 200க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இது தொடர்பாக நாளை மாநகராட்சி ஆணையரிடம் பேசவுள்ளோம் அதற்குப் பிறகு அடுத்தகட்ட போராட்டத்தை கையில் எடுப்போம்" எனத் தெரிவித்தார்.