சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுமார் 5.22 லட்சம் ஏக்கரில் 'குறுவை நெல் சாகுபடி' நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும், ஜூன் மாதத்தில் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். அதன்படி, வேதாரண்யத்தில் 6 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 93 ஆயிரம் ஏக்கர்களில் குறுவை நெல் விதைக்கப்பட்டது. நடப்பாண்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மொத்தம் 3.5 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 12ஆம் தேதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் கூறும்போது, "ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த தண்ணீர் தற்போது 54 அடியாக குறைந்துள்ளது. தண்ணீர் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இதனால், குறுவை சாகுபடியில் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்களும், நடவு செய்த நெற்பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. நேரடி விதைப்பில், தற்போது 50,000 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா விவசாயிகள் முழுமையாக காவிரி நீரைத்தான் நம்பி உள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாததால், நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலும் காய்ந்துவிட்டன. அதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளிலும் நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. சுமார் 60 நாட்களுக்கு மேல் சென்றுவிட்டது; இனிமேல் தண்ணீர் சென்றாலும் பயிர்களுக்கு பயன் இல்லை. இதனால் விவாசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சியும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சியும், ஆகஸ்ட் மாதத்தில் 45 டி.எம்.சியும் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு முழுமையாக தண்ணீரை வழங்கவில்லை, 37 டிஎம்சி பாக்கி இருக்கிறது. அதை வழங்கி இருந்தால் தமிழக விவாசாயிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. கர்நாடகவில் 90 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு 24,000 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு தேவை. கர்நாடகா பெயர் அளவுக்கே தண்ணீர் திறந்து விடுகிறார்கள். தண்ணீர் வந்தால்தான், அடுத்த பருவமான சம்பாவிற்கு உதவியாக இருக்கும்" என்றார்.
நாகை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், "டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் இந்த ஆண்டில் 14,190 ஏக்கா் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடைமடை, தலைமடை என மொத்தமாக சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் தற்போது குறுவை சாகுபடி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைமடையான தஞ்சை மாவட்டத்தில் பூதலிரூரில்கூட தற்போது பயிர் காய்ந்து வருகிறது. குறுவையை பொறுத்தவரை நேரடி விதைப்பு என்றால் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாயும், நடவு என்றால் 15 ஆயிரம் ரூபாயும் செலவாகிறது. தற்போது வயல் முழுவதும் காய்ந்து விட்டது. காவிரி நீரை நம்பிய எங்களுக்கு மிஞ்சியது கண்ணீர்தான். இதற்கு மேல் காவிரியில் தண்ணீர் வந்தாலும், மழை பெய்தாலும் பயன் இல்லை" என்றனர்.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காதது முக்கிய காரணம் என்றாலும், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததும் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய காரணம் என தெரிகிறது.
அதிமுக குற்றச்சாட்டு: 'காவிரியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு தண்ணீரைப் பெற்றுத்தர திமுக அரசு தவறிவிட்டது' என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, அதிமுக சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெறுவதற்காக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி அரசும் மேற்கொண்ட தொடர் சட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பினை அளித்தது. இதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினை மத்திய அரசு 1.6.2018 அன்று அமைத்தது.
தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. காவிரி நீர்: இதன்படி மாதாந்திர அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, தமிழக உரிமையை மீட்டு கொடுத்தது அதிமுக அரசு. ஆனால், காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தை வஞ்சித்தது திமுக அரசு. 1974-ல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், நமக்கு 500 டி.எம்.சி-க்கும் குறையாமல் தண்ணீர் வந்திருக்கும். திமுகவினர் நடத்திய மக்கள் விரோத ஆட்சியால், நாம் 1974ஆம் ஆண்டு வரை பெற்று வந்த பங்கில் பாதிக்கு மேல் இழந்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் வழக்கு: சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு - கர்நாடகா இடைய காவிரிநீர் பங்கீட்டு பிரச்னை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கும் இடையே முடிவில்லாமல் தொடரும் இந்த சிக்கல், நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும், சட்டப் போராட்டமாக நீடித்து வருகிறது. இந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம், டெல்டா விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழக அரசு கடந்த 14ஆம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரியை மட்டுமே நம்புவதா..?: காவிரியின் துணை ஆறுகளான பவானி, நொய்யல் ஆறுகள் பாயும், கோவை சித்திரைச் சாவடி தடுப்பணை முதல் கரூரில் காவிரியில் கலக்கிற இடம் வரை 32 தடுப்பணைகள் இருக்கின்றன. இந்த தடுப்பணைகளால் கொங்கு பகுதிகளில் விவசாயம் செழிப்பாக உள்ளது. இந்த நொய்யல் ஆற்றுப்படுகையில் அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காவிரியை மட்டுமே நம்பி ஒவ்வொரு முறையும் சாகுபடி பாதிக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி நீர் கிடைக்காததால் காயும் குறுவை நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை!