சென்னை: இந்தியக் கடலோர காவல் படைக்காக, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான விக்ரஹா ரோந்துக் கப்பலின் சேவையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக.28) சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விக்ரஹா ரோந்துக் கப்பலானது கடலோர காவல் படையின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
அதிநவீன கப்பல்
98 மீட்டர் நீளம் கொண்ட விக்ரஹா, ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் இருந்து செயல்படும். அதில் 11 அலுவலர்களும், 110 மாலுமிகளும் இருப்பார்கள். இந்த ரோந்துக் கப்பலில் அதிநவீன ரேடார்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன.
தேடல், மீட்பு பணிகளுக்காக எந்நேரமும் இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர், நான்கு அதிவேகப் படகுகள் இதில் தயார் நிலையில் இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன், வானூர்திகளையும் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ’ஃபோபர்ஸ்’ துப்பாக்கியும் விக்ரஹாவில் உள்ளது.
மேலும், கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய் கசடுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் கூறியுள்ளனர்.
கடலோர காவல்படைக்கு பாராட்டு
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "இந்தியப் பெருங்கடல் பகுதியில் உஷார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். மாறி வரும் உலக சூழலில் பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க வேண்டியது முக்கியமான ஒன்று.
இந்தியாவின் கடலோர காவல் படை மிகச்சிறந்த பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது. மேலும் உள்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு, கடல்சார் ஆராய்ச்சி தீவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு, சுங்கத் துறை உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கடலோரக் காவல் படையினர் சிறப்பாக செயல்படுவருகின்றனர்.
நமது கடலோர காவல் பாதுகாப்பை அதிகரித்ததன் மூலமாகவே 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு நமக்கு கடல் வழியான தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை.
சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள் இந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு உபகரணங்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி
2023ஆம் ஆண்டுக்குள் உலகில் பாதுகாப்புக்கான பட்ஜெட் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும். உலகில் பல்வேறு நாடுகளில் ஒட்டு மொத்த செலவீனம் இவ்வளவு பெரிய அளவில் இருக்காது.
இதுபோன்ற நேரங்களில் இந்தியா, பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதும், உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதும் மிகவும் முக்கியம்.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்பு தொழில் வழித்தடம், பாதுகாப்பு தொழிலுக்கு தேவையான கொள்கை ரீதியான முடிவுகள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளதால், இந்தியா கப்பல் கட்டுமானத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றது.
அடுத்து வரும் காலங்களில் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகுக்கும் இது போன்ற பொருள்களை இந்திய பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் ரத்து’ - முதலமைச்சர்