சென்னை: மிக்ஜாம் புயாலின் காரணமாக ஏற்பட்ட மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி தற்போது மேலும் 6 பேர் உயிரிழந்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.
சாலைகள், குடியிருப்புகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என எதையும் பாதுகாக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவானது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் வாகன ஓட்டிகளும், திரும்பி வீட்டிற்குச் செல்வதற்குள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பலரும் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மழை வெள்ளத்தின் தாக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள சோகமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (டிச.6) காலை 6 மணி நிலவரப்படி, புயலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தாமோதரன் (40) என்பவர் தனது வீட்டில் தேங்கியிருந்த மழை நீரில் இறந்து காணப்பட்டுள்ளார்.
அதேபோல், மயிலாப்பூரைச் சேர்ந்த பெருமாள் (64) உடல்நலக் குறைவு காரணமாக படுக்கையில் இறந்துள்ளார். நேற்று இவர் தனது வீட்டில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரது உடல் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
G5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் எல்லைக்குட்பட்ட அஸ்பிரின் கார்டன் அருகே தேங்கியிருந்த மழைநீரில் தலைமை காவலர் ருக்மாங்கதன் (48) என்பவர் இறந்து கிடந்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் துயரம்; சென்னையில் 8 பேர் உயிரிழப்பு - 15 பேர் மீட்பு!
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் போக்குவரத்து ஆய்வாளர் சாமிக்கண்ணு (85) அவரது வீட்டில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இவரது உடல் மீட்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அதேபோல மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இவரது உடல் மீட்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், புயலின் தாக்கத்தால் சென்னையில் தற்போது மேலும் 6 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழை நீர் தேங்கியதால் சென்னை மாநகரத்தில் தோண்டப்பட்டிருந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
1. கணேசபுரம் சுரங்கப்பாதை
2. செம்பியம் சுரங்கப்பாதை
3. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
4. துரைசாமி சுரங்கப்பாதை
5. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
6. சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை (ஒருவழி பாதை)
7. C.B. சாலை சுரங்கப்பாதை
8. வியாசர்பாடி சுரங்கப்பாதை
9. திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை
10. சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை
11. கதிர்வேடு சுரங்கப்பாதை
உள்ளிட்ட 11 இடங்களில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. மேலும் 75 இடங்களில் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது.