சேலம் மாவட்டம், மேட்டூரில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு (டாமின்) சொந்தமான எள்ளிகரடு, கருங்கல் அணை குவாரிகளில் பணியாற்றிய தொழிலாளர்களில் 118 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், அவர்களுக்கான சம்பள பாக்கித் தொகையை வழங்கக் கோரியும், தருமபுரி மாவட்ட கனிம தேசிய தொழிலாளர் சங்கம், மேட்டூர் பொது ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள தொழிலாளர் தீர்ப்பாயத்தில் 2001ஆம் ஆண்டு் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. மேலும், தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை தருமாறும் டாமின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் இந்த தீர்பை எதிர்த்து டாமின் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பள பாக்கியை தொழிலாளர்களுக்கு வழங்கும்படி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு அதே தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான பிரதான வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 105 தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாமின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா 10 ஆயிரம் ரூபாயை டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் வழங்கவும், அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என டாமின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
நவம்பர் 18,19,20ஆம் தேதிகளில் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பணிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை குவாரியின் மேலாளரை சந்தித்து காட்ட வேண்டும் என தொழிலாளர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதை சரிபார்த்து சம்மந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ரொக்கமாவோ அல்லது அவர்களின் வங்கிக் கணக்கு மூலமாகவோ பாக்கித் தொகையை வழங்க டாமின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.