சென்னை: இன்றைய தொழில்நுட்ப உலகம் மக்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமின்றி இனி வாழ்க்கை இல்லை என்ற நிலையை மனிதர்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள். தொழில்நுட்பங்கள் வளர வளர அதில் மோசடி செய்யும் கும்பல்களும் பெருகத்தொடங்குகின்றன. குறிப்பாக, போலி இணைய வழி முகவரிகளைப் பதிவிடுதல், புகைப்படம், தகவல்களை மிகைப்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாக்குவது, ஏடிஎம், வங்கிக் கடன் அட்டைகளை முறைகேடாக பயன்படுத்துவது போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்தாண்டில் இந்தியாவில் சைபர் குற்றங்கள் 63.5 விழுக்காடு உயர்ந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இந்நிலையில், கடந்த எட்டுமாதங்களாக இணையப்பயன்பாடு அதிகரித்த நிலையிலும், அதிகப்படியான வேலையிழப்புகள் நேர்ந்த நிலையிலும், குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. முதியவர்களை மட்டும் குறிவைத்து ஏடிஎம் காலவதியாகிவிட்டதாக கூறியும் மோசடி கும்பல்கள் கைவரிசையை காட்டியுள்ளன.
சென்னை சைபர் பிரிவு
சென்னை ஆணையரகத்தில் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார், இந்த சைபர் குற்றங்கள் குறித்து விசாரித்து வந்தனர். சென்னைப் பெருநகரில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க நீண்ட தூரம் வரவேண்டிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை பெருநகரில் உள்ள 12 மாவட்ட காவல் துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் எளிதில், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில், உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவித்து உரிய தீர்வு காண ஏற்பாடு செய்துள்ளனர். காவல் துணை ஆணையர் மேற்பார்வையில் செயல்பட்டுவரும் இந்த சைபர் பிரிவில் பணியாற்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 மாதத்தில் 1,200 புகார்கள்
சென்னையில், இதுவரை, டெபிட், கிரடிட் கார்டு மோசடி, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி, ஆன்லைன் லட்டாரி, ஓடிபி மோசடி, லோன் மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, சமூகப் பிரிவினையைத் தூண்டுதல், தனி நபருக்கு எதிரான இணையதளச் செயல்கள், பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாசப் பதிவுகள் போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கடந்த 6 மாதத்தில் மட்டும் 1,200 புகார்கள் பெறப்பட்டு, 657 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் காவலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு சைபர் குற்றங்கள் இரு மடங்கமாக பெருகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
24 மணிநேரத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தல்
முன்பு ஓடிபி மோசடியில் பணத்தை இழந்தால், பணத்தை மீட்கமுடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், தற்போது 24 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்டுவிடலாம் என்கின்றனர் சைபர் கிரைம் காவலர்கள். அந்தவகையில், கடந்த 4 மாதத்தில் பொதுமக்கள் இழந்த 1 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாயை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் லோன் மாத தவணையை அரசு ரத்து செய்ததை அறிந்த மோசடி கும்பல், வங்கியிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை பறித்துவந்துள்ளனர். அரசு அறிவித்த திட்டங்களை வங்கிகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்குள் மோசடி கும்பல் அதைப்பயன்படுத்தியும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிடுவதாக சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவிக்கிறார்.
வங்கியிலிருந்து பேசுவதாக கூறி விவரங்களைக் கேட்டால், பொதுமக்கள் யாரும் விவரங்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தும் அவர், சைபர் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பணத்தை மோசடி கும்பலிடம் இழந்தால் 24 மணிநேரத்தில் சைபர் பிரிவில் புகார் அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன்களை சிறுவர்களிடம் கொடுக்கேவண்டாம் எனவும் அவ்வாறு கொடுத்தால் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழக்கக்கூடும் எனவும் எச்சரிக்கிறார்.
இதையும் படிங்க: 2020இல் சைபர் கிரைம் புகாரில் 62 விழுக்காடு நிதி மோசடி புகார்