சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடி அதிகரித்துவரும் நிலையில், தற்போது ஃபேஸ்புக் மூலமாகப் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பெண்கள் பெயரில் கணக்கை உருவாக்கி, அதில் ஆண்களைக் குறிவைத்து சில கும்பல் பணம் பறித்துவருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் சுமார் 19 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளனர். இதில் மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் மோனிகா குமாரி, சோனாலி மிஸ்ரா என்ற பெயரில் ஆண்களைக் குறிவைத்து நட்புக்கான அழைப்பை விடுகின்றனர்.
அதில் இருக்கும் முகப்புப் படங்களை (profile picture) பார்த்து ஆண்கள் அவர்களுடன் நட்பு அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள்.
தொடரும் மிரட்டல்
அதன் பின்னர் ஃபேஸ்புக் குறுஞ்செய்தி (chat) மூலம் ஆண்களிடம் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு, வாட்ஸ்அப் செயலி மூலம் காணொலி அழைப்பு முறையில் அழைத்து அதில் நிர்வாணமாகத் தோன்றி, ஆண்களையும் ஆபாசமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வர்.
அப்போது பெண்ணின் ஆசை வார்த்தைகளை நம்பி, சில ஆண்கள் தொடர்ந்து காணொலி அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கே தெரியாமல் அதனைப் பதிவுசெய்து, அதன்பின் அந்தப் பதிவை வைத்துப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், சமூக வலைதளத்திலும், நண்பர்களுக்கும் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்ச்சியில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர், இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்குப் புகார் அளித்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட அக்கும்பல், மாணவனைப் பழிவாங்கும் பொருட்டு, அவரது நண்பர்கள், தாய் உள்ளிட்டோருக்கு மாணவன் பேசிய காணொலிப் பதிவை அனுப்பி மிரட்டியுள்ளனர்.
மிரட்டலில் பெரும் கும்பல் பங்கேற்பு
அதற்கு அந்த மாணவன், மற்ற நண்பர்களுக்கும் காணொலி சென்றுவிடக் கூடாது என்பதற்காக ரூ. 8000 பணத்தை போன் பே மூலம் அந்தப் பெண்ணிற்கு அளித்துள்ளார்.
அதன்பின் இது குறித்து ஆய்வுசெய்த போது தான், இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் ரூ.6 ஆயிரமும், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ. 1.93 லட்சமும், தியாகராய நகரிலிருந்து ஒருவர் ரூ.17 லட்சமும் இழந்துள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து புகார்தாரர்கள் கூறியதாவது, மோசடி கும்பல் தங்களை மிரட்டும் போது தாங்கள் ஒரு யூ-ட்யூப் சேனல் நடத்துவதாகவும், குற்றப்பிரிவு காவல் துறையினர் எனக் கூறியும் பணம் பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி makemefriend.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், இதுபோன்ற மோசடிக் கும்பல் பெண் எனக் கூறிக்கொண்டு மோசடியில் இறங்குவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து, அந்த மோசடி கும்பலுக்கு பணத்தை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தீர்வு தான் என்ன?
இதையடுத்து கொடுக்கப்பட்ட ஒவ்வொரு புகாரையும், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், ஃபேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் கும்பலை, சைபர் கிரைம் உதவியுடன் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் புகார்களுக்கு பின்னால் இருக்கும் மோசடி நபர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
பின்னர் இதுபோன்று அடையாளம் தெரியாத பெண்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும், அவர்கள் நிர்வாணமாக வீடியோ கால் செய்தால் உடனடியாக அழைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி - சகோதரர்கள் கைது