சென்னை: கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், ஆவணங்கள் மற்றும் பொருள்களை அள்ளிச் சென்றனர். இது தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கத்தி, கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்து, பொருள்கள், ஆவணங்களை திருடி, அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். அதிமுக தலைமைக்கழகம் சீல் வைக்கப்பட்டதற்கு காரணம் ஓபிஎஸ் தான்.
அதிமுக தலைமை கழகம் சூறையாடப்பட்டது தொடர்பாக, மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்கனவே புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக தலைமை கழகத்தை கைப்பற்றப்போவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபியிடம் முன்பு மனு அளித்திருந்தார். காவல் துறை பாதுகாப்பு இருந்தும் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கலவரம், போதை நகரமாக மாறி வருகிறது. காவல் துறையை முதலமைச்சர் ஸ்டாலின் தன்வசம் வைத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதையெல்லாம் செய்வதற்கு ஓ. பன்னீர்செல்வத்திற்கு வெட்கமாக இல்லையா?. அதிமுகவின் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் வந்த வாகனத்தில் ஏற்றி சென்று விட்டனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை புகாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிமுக பொருளாளர் என ஓ. பன்னீர் செல்வம் வாதத்தை வைத்து கொண்டாலும், அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், சரிபார்ப்பதற்கும் தான் ஓபிஎஸ்க்கு அதிகாரம் உண்டு. அதனை எடுத்துச் செல்வதற்கு அதிகாரம் கிடையாது” என தெரிவித்தார்.
மேலும், அதிமுக வங்கி கணக்குகள் முடக்கம் செய்யக்கோரி ரிசர்வ் வங்கிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருப்பது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், “ஓபிஎஸ் ஐநாவிற்கு கூட கடிதம் எழுதட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்றார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்!