சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி அணியில் மிக முக்கிய நபராக கருதப்பட்டவர், சி.வி.சண்முகம். இவர் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
ஓபிஎஸ் அணியை ஆரம்பத்தில் இருந்து தாக்கி பேசிய சண்முகம், கடந்த சில நாட்களாக ஈபிஎஸ்ஸுடன் கருத்து வேறுபாட்டில் உள்ளதாக கூறப்பட்டது. டிச.24ஆம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் முதலில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனியாக தனது ஆதரவாளர்களுடன் வந்து சி.வி.சண்முகம் மரியாதை செய்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
சமீபத்தில், "பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும்" என சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்வினை ஆற்றினார். இதற்கு அடுத்து சி.வி.சண்முகத்தை அழைத்து, "இது போன்று பேச வேண்டாம்" என ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சி.வி.சண்முகம் அதிருப்தியில் இருந்துள்ளார்.
இதன் காரணமாகவே எம்ஜிஆரின் நினைவு நாளில் தனியாக வந்து மரியாதை செலுத்தினார் என தகவல் வெளியாகியது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி படம் அழிக்கப்பட்டது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஈபிஎஸ்ஸுக்கும் சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதா என்பது குறித்து அதிமுகவின் ஒரு முக்கிய நிர்வாகியிடம் விசாரிக்கும் போது, "ஈபிஎஸ்-க்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. எம்ஜிஆரின் நினைவு நாளில் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் இருந்து காலையில் கிளம்பி வந்தார். குறித்த நேரத்திற்குள் அவரால் வரமுடியவில்லை. அதனால் தான் எப்படியாவது எம்ஜிஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தனியாக அஞ்சலி செலுத்தி இருக்கிறார்" எனக் கூறினார்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 26) எடப்பாடி பழனிசாமியை சி.வி. சண்முகம் சந்தித்தார். இதில், அமமுக-வில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்களை சி.வி.சண்முகம் அழைத்து வந்தார். அமமுகவில் இருந்து விலகி விழுப்புரம் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்குக'' - முதலமைச்சர்