சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சவுதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் குரும்பலன்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த இரண்டு எமர்ஜென்சி விளக்குகள் மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதில், தங்க தகடுகள் மறைத்து வைத்து கொண்டு வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூ. 24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 593 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அலுவலர்கள் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.
![தங்கம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-gold-smuggling-visual-script-7208368_11012020192039_1101f_1578750639_585.jpg)
இதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த யாசின்(30), சென்னை புதூரை சேர்ந்த முகமதி பனீஸ்(35) ஆகியோரை சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அலுவலர்கள், இருவரிடமும் சோதனை செய்ததில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து, ரூ. 38 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 944 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கேரள இளைஞர் உள்பட மூன்று பேரிடமிருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 537 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்