சென்னை: தொழிலதிபரைக் கடத்திய வழக்கில் காவல்துறைக்குத் திருப்புமுனையாக எதிர்பார்க்காத வகையில் ஒரு குற்றவாளி சிக்கியுள்ளார்.
கடத்தல் கும்பல்
சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மூசா. இவர் தற்போது பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்யும் தொழிலதிபராக உள்ளார். கடந்த மாதம் கானாத்தூரில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்று வரும்போது, இவரை ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். கடத்தல் கும்பல் இவரை விடுவிப்பதற்கு ரூ. 50 லட்சம் கேட்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மூசாவின் மகனிடம் பேரம் பேசியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, தனிப்படை காவல்துறை கடத்தல் கும்பலிடம் பணத்தைக் கொடுப்பது போல் நாடகமாடி, சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் அருகே காரிலிருந்த கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது, பணத்தைக் கொடுக்க வந்தது காவல்துறை என்று தெரிந்துகொண்ட கடத்தல்காரர்கள், காரில் தப்பிக்க முயன்ற போது, கார் மீது பாய்ந்த காவலர் சரவணக்குமார், காரில் தொங்கிக் கொண்டே சென்று அந்த கும்பலை மடக்கிப் பிடித்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
தனிப்படையினரால் கைது
தொழிலதிபர் மூசாவிடம் வேலை பார்த்த, பழைய குற்றவாளி அறுப்பு குமார் மற்றும் அவனது கூட்டாளி பிரகாஷ் மற்றும் சங்கீதா என்ற ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் தேடிய நிலையில், சதீஷ் என்ற மற்றொருவரை, தற்போது கீழ்ப்பாக்கம் தனிப்படை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
இந்த வழக்கில், தற்போது கைதாகியுள்ள சதீஷ் எவ்வாறு காவல்துறையிடம் சிக்கினார் என்ற சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சதீஷ், சங்கீதாவின் சகோதரர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். சங்கீதா அவரது கணவருடன் சேர்ந்து, சென்னை போரூரில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வந்ததாகவும், அறுப்பு குமார் மூலம் மூசாவை கடத்திச் சென்று அந்த மறுவாழ்வு மையத்தில் கட்டி வைத்துள்ளனர்.
கையும் களவுமாக மாட்டியது
அப்போது ஒரு நாற்காலியில் அமர வைத்து மூசாவின் கண்களைத் துணியால் கட்டியுள்ளனர். துணியால் கண்களைக் கட்டும் போது, மூக்கிற்கும் கண்களுக்கும் இடையில் உள்ள வழியாகப் பார்த்தபோது அவரது கண்களைக் கட்டிய நபருக்கு வலதுகால் கட்டை விரலில் பாதி துண்டிக்கப்பட்டு இருந்ததைக் கவனித்துள்ளார். பின்னர், மூசா காவல்துறையால், மீட்கப்பட்டப் பிறகு இதுபற்றி தெரிவித்துள்ளார்.
கடத்தல் கும்பலைத் தேடி வந்த தனிப்படை காவல்துறை, இந்த வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தினரை ஒவ்வொரு நபராக அழைத்து விசாரித்ததில், சங்கீதாவின் தம்பி சதீஷ் விசாரிக்கப்பட்டுள்ளார். தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் விசாரணையில் தெரிவித்த சதீஷின், கால் விரலை எதேர்ச்சையாகக் கவனித்த காவலர், அவருக்கு வலது கால் கட்டை விரல் துண்டிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்துள்ளனர். துண்டிக்கப்பட்ட கட்டைவிரலைக் கடத்தப்பட்ட நபர் கவனித்து, கூறியதால் இந்த வழக்கில் அதை வைத்து ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு அலுவலர்களை மிரட்டுவதை திமுகவினர் நிறுத்த வேண்டும் - எடப்பாடி.பழனிசாமி