சென்னை: மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கடந்தாண்டு தேசிய அளவில் பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நுழைவு தேர்விற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டன.
கரோனா தொற்று காரணமாக உயர்கல்வி நிறுவனங்கள் கல்வி ஆண்டு தொடங்கும் தேதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. வரும் கல்வி ஆண்டில் வகுப்புகளை வழக்கம்போல நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகம் மானியக்குழு நேற்று (டிச.21) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கியூட் இளநிலை தேர்வு அடுத்த ஆண்டு (2023) 21 மே முதல் 31 மே வரை நடைபெறும். இதற்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும். கியூட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கியூட் இளநிலை நுழைவுத் தேர்வு முடிவு ஜூன் 3ஆம் வாரத்திலும், கியூட் முதுநிலை நுழைவுத் தேர்வு முடிவு ஜூலையிலும் வெளியிடப்படும். அடுத்தாண்டு ஜூலைக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாஸ்க் கட்டாயமா? - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சொன்னது இதுதான்