கடலூரைச் சேர்ந்த தணிகைவேல் என்பவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். தணிகைவேலிடம், சிங்கப்பூரில் வைத்து ஒரு நபர் 30 சவரன் தங்க நகைகளை சென்னை விமான நிலையத்திலுள்ள ஒருவரிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பியுள்ளார்.
அவ்வாறு சென்னை வந்த தணிகைவேலிடம் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, தங்க நகைகள் எங்கே எனக் கேட்டுள்ளது. அதற்கு அவர், நகைகள் திருடுபோய்விட்டதாகக் கூறியுள்ளார். உடனே, தணிகைவேலை விமான நிலையத்திலிருந்து அக்கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது.
கடத்திய கும்பல் பின்னர் தணிகைவேலின் தந்தை கலியமூர்த்திக்கு போன் செய்து, 30 சவரன் நகைகள் அல்லது ஏழு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். பயந்துபோன தணிகைவேலின் தந்தை, கடலூருக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, தணிகைவேலுடன் கடலூருக்கு காரில் வந்த கடத்தல் கும்பலை, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கடலூர் காவல் துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
இச்சம்பவம் பற்றி சென்னை விமான நிலைய காவல் துறைக்குத் தகவல் தரப்பட்டதையடுத்து, தணிகைவேல், கடத்தல் கும்பலை அழைத்து வர சென்னை விமான நிலைய காவல் துறை கடலூர் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’பாத்திமாவின் தற்கொலைக்கு மத ரீதியான தாக்குதலே காரணம்’