சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ்நாடு, கேரள எல்லை வழியாக அரபிக் கடலை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வட கிழக்குப் பருவ மழை காலத்தில் இயல்பாக பெய்யும் மழையின் அளவை விட தமிழ்நாட்டில் மூன்று விழுக்காடு குறைந்து இதுவரை 247 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கனமழையினை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்