மத்திய அரசின் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் பணி புரிவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலரும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”14ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 20 மொழிகளில் 112 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டம், தேர்வு மையம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியிடப்படும்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் 3.30 மணிக்குள் செலுத்த வேண்டும்.
பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 எழுதுவதற்கு 1,200 ரூபாய் கட்டணமாகவும், தாள் 1 அல்லது 2 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை எழுத ஆயிரம் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
எஸ்.சி. ,எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 ஆகியவற்றை சேர்த்து எழுத 600 ரூபாயும், ஒன்றினை மட்டும் எழுதுவதற்கு 500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விருதை திருப்பித் தர முயன்ற ஆசிரியர்