சென்னை: தென்னிந்தியாவின் மிகப்பெரிய யாத்திரை தலங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 25ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு நடைபெறும் மண்டல கால பூஜை, மகர விளக்கு மகா உற்சவம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படுகிறது. இதனால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசலின் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் அரசின் தலைமைச் செயலாளரை, கேரள மாநில தலைமைச் செயலாளர் உடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்படி, தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கேரள மாநில தலைமைச் செயலாளர் வி.வேணுவிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மூலம், முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநில தலைமைச் செயலாளர், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயில் சேவா புரஸ்கார் விருது பெறும் தெற்கு ரயில்வே பணியாளர்கள்!