சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் பயிர்க் கடன் குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.6341.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 2021-22இல் 5,87,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 2,80,565 நபர்களுக்கு ரூ.1,730.81 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 1,40,722 எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,12,537க்கு ரூ 741.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1,54,847 விவசாயிகளுக்கு ரூ.1022.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையில் முதல் முறையாக ஆடு, மாடு கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு, வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பாண்டில் இதுவரை 1,68,386 விவசாயிகளுக்கு ரூ.768.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் தங்கள் சொந்த காலிலேயே வாழ்க்கை நடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு 5 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, நடப்பாண்டில் இதுவரை 3,376 எண்ணிக்கையில் ரூ.7.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
14,51,344 எண்ணிக்கையிலான நகைக்கடன்கள் ரூ.5,013.33 கோடியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 13,12,717 எண்ணிக்கையிலான குடும்பங்கள் பலன்அடைந்துள்ளனர்.
1,17,617 எண்ணிக்கையிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,755.99 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் துவங்க இருக்கின்றது. இதன் மூலம் 15,88,309 எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பலன் அடைவார்கள். நடப்பாண்டில் 14,457 எண்ணிக்கையிலான குழுக்களுக்கு ரூ.474.33 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடத்தில் வகித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 6,063 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறைக்கென தனி பயிற்சிக் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
கூட்டுறவுத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 268 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு ரூ.75.75 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சரால் இடம் தானமாக வழங்கப்பட்டு, விரைவில் கட்டுமாணப் பணிகள் துவங்கவுள்ளன.
புதிய கட்டடத்தில் 2,500 மாணவ மாணவியர்கள் கல்வி பெற இயலும், நாட்டிலேயே முதல்முறையாக தேசிய அளவிலான கூட்டுறவு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் மேலாண்மை கல்வி நிலையம், கொடைக்கானல் வட்டம், மன்னவனூர் கிராமத்தில் உருவாக்கப்பட உள்ளது.
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழும், FSSAI உரிமமும் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை ISO தரச்சான்றிதழ் பெற்ற நியாய விலைக்கடைகள் 3,662 ஆகும்.
மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நியாய விலைக்கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 2,252 எண்ணிக்கையிலான கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோர் நலனை கருத்தில்கொண்டு, நியாய விலைக்கடைகளில் 5 கிலோ மற்றும் 2 கிலோ FTL சிலிண்டர்கள் விற்பனை துவங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 6,970 நியாய விலைக்கடைகளுக்கு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிலம் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டு ஒன்றுக்கு 300 புதிய கடைகள் வீதம் கட்டப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 282 கடைகளுக்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில், நியாய விலைக்கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 398 உள்ளாட்சி அமைப்புகளின் நிதிஆதாரங்களின் கீழ் 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் 65 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 16 மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் 117, ஆக மொத்தம் 794 நியாயவிலைக் கடைகள் ஆகும்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாநிலம் முழுவதும் 379 மருந்துகடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடியில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மருந்துகடைகளில் மொத்த ஆண்டு விற்பனை 2021-2022ஆம் ஆண்டில் ரூ163.30 கோடயை எட்டியுள்ளது. இந்த மருந்துகடைகள் மூலம் 34,48,342 வாடிக்கையாளர்களுக்கு ரூ.26.91 கோடி அளவிற்கு (தள்ளுபடி) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு (2022-2023) 31-10-2022 வரை ரூ.99.60 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியிலும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மைய வங்கியியல் தீர்வுமுறை நடைமுறையில் உள்ளது. இந்த வங்கிகளில் மொபைல் பேங்கிங், RTGS, NEFT போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 27.09.2022 முதல் UPI Integration வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் கூகுல்பே, பேடிஎம் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த UPI Integration வசதி அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் மைய வங்கியியல் தீர்வுமுறை பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.
பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஓரிருமாதங்களில் நிறைவு பெற உள்ளன. மாநிலம் முழுவதிலும் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்களையும், 25 பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களையும் கணினிமயப்படுத்துவதற்கு நபார்டு வங்கி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கணினிமயமாக்கல் பணிகளால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.
கூட்டுறவு நிறுவனங்களில் இதுவரை 808க்கு மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.365.00 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம்விடுவதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாக்குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களைபணிநீக்கம்செய்யும் பணிகளும் முடவடைந்துள்ளன.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பொதுவான ஒரு மொபைல் செயலி உருவாக்கப்படும்.
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் தயாரிக்கும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய மூன்றும் முதற்கட்டமாக ஏற்றுமதி உரிமத்தை பெற்றுள்ளன.
இதன் மூலம் கடந்த ஆண்டில் சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ரூ.40.00 இலட்சம் செலவில் ஏற்றுமதி வணிகம் நடைபெற்றுள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
நபார்டு வங்கி மூலம் 1 சதவிகித வட்டியில் பெறப்படும் கடன் உதவியை கொண்டு லாபத்தில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவைமையங்களாக மாற்றுவதற்கு கடந்த ஆண்டு வரை ரூ.54.00 கோடியும், 454 சங்கங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் 1,648 கடன் சங்கங்களில் ரூ.456.97 கோடியில் 8,438 பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 34,790 நியாய விலைக்கடைகளில் 33,487 கடைகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2,06,641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23,166 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 13.10.2022 அன்று அனைத்து மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற 14.11.2022 அன்று இறுதி நாளாகும். இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!