சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றினாலும் மாநில அரசுப் பணியில் சேர்க்கப்படாததால், இந்திய நிர்வாகப் பணிகளில் சேர முடிவதில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக குரூப் 1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தங்களை மாநில அரசுப் பணியிடங்களில் சேர்க்க தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கை நிராகரிப்பட்டது. இதையடுத்து 97 பேர் பணி உயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதி எம்.கோவிந்தராஜ் விசாரித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வருவாய் மற்றும் பொது நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் சேர்த்து நிர்வாக பணியை உருவாக்குவது, கேரள அரசை போல வளர்ச்சிக்கான மாநில கொள்கைகளை செயல்படுத்துவது உள்ளிடவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
குரூப் 1 பணியின் கீழ் உதவி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை விட சமமற்றவர்களாக நடத்தப்படுவது வருத்தம் அளிப்பதாகவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துணை ஆட்சியர்கள் வரையறையின் கீழ் கொண்டு வரக்கூடிய பணியிடங்களை கண்டறியும் வகையில் ஒரு குழுவை ஆறு மாதத்திற்குள் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுல இருக்குற பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன' - சீமான்