இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி நாகை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் மற்றும் மழை ஆபத்தை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டு பல ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தானே, வார்தா மற்றும் கஜா புயலின் போது கிடைத்த அனுபவங்களை கணக்கில் கொண்டு தமிழக அரசு நிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்ட போதிலும் உரிய தயாரிப்புகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளானார்கள்.எனவே, தமிழக அரசு நிவர் புயலை எதிர்கொள்ள கீழ்க்கண்டவைகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
- சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள முகாம்களில் மருத்துவம், நோய்த் தடுப்பு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
- கொரோனா நோய்த் தொற்று பரவும் ஆபத்து உள்ளதால் இம்முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு முகக் கவசம் மற்றும் சானிடைசர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். முகாம்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கூட்ட நெரிசல் இல்லாமல் அதிகமான முகாம்களை ஏற்பாடு செய்து தர வேண்டும். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள், திருமண மண்டபங்களை முகாம்களாக அமைத்திட வேண்டும்.
- வெளி மாவட்டங்களிலிருந்து மின்சார ஜெனரேட்டர்கள், வாட்டர் டேங்கர் லாரிகள், மின்சார ஊழியர்கள் உடனடியாக புயலால் பாதிக்கும் மாவட்டங்களுக்கு அனுப்பிட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
- புயலின் காரணமாக மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தயார் நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இப்பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளையும் பயன்படுத்திட வேண்டும்.
- முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் மட்டுமல்லாமல் இதர அனைத்து மக்களுக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திட அந்தந்த கிராமங்களில் உள்ள சத்துணவு கூடங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- இதர மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள், நடமாடும் மருத்துவமனைகள் வரவழைக்கப்பட்டு நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
- கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு வழங்குவதற்கு என சிறப்பு நிதி மற்றும் உணவுப் பொருள் ஏற்பாடுகள் செய்து தரப்படாததால் அதிகாரிகள் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகளை அணுகி அவர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யும் நிலையே இருந்தது. இதனை மாற்றிட சிறப்பு நிதி மற்றும் உணவுப் பொருட்களை சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாட்சியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.
- தாழ்வான பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நீர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க படகு வசதிகள் செய்திட வேண்டும்.
-நிவாரண பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை முழுமையாக ஈடுபடுத்திட வேண்டும்.
- சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தினை நடத்தி ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- நிவர் புயல் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் கூடுதலான அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அனுப்பி நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
வழக்கமாக இத்தகைய இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது அம்மக்களை பாதுகாக்கவும், நிவாரண பணிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்பாக ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதே போன்று நிவர் புயல் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் மக்களை பாதுகாக்கவும், நிவாரண பணிகளில் ஈடுபடுவது, உணவு மற்றும் மருத்துவ பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் முழுமையாக ஈடுபட வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.