அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு வயது 58 என்பதை 59ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு மூலம், இந்த மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுவோர் அனைவரும், மேலும் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
அதில், “ஏறத்தாழ ஒரு கோடி பேர் உயர்கல்வி பெற்று, பல்வேறு திறன்களில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும்போது, அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிகளில்கூட ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்துவரும் நிலையில், பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்தி இருப்பது வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும். பணியில் உள்ளோரின் பணி உயர்விலும், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். வேலை தேடி வருவோருக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் அரசின் உத்தரவை விரைந்து ரத்து செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஓய்வு பெறும் வயது உயர்வு...இட ஒதுக்கீட்டை பாதிக்கும்!