சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினரும், மாநிலத் துணைச் செயலாளருமான கே. சுப்புராயன் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, "16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றம் தொடங்கியுள்ளது. இந்திய அரசியலில் புதிய மாற்றம் தொடங்கியுள்ளது. மாநில அதிகாரத்தில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகள் வெற்றிபெற்றுள்ளது. எனவே, பாஜக இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முனைப்பு காட்டிவருகிறது.
பாஜக மதவெறி சக்திகளின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முயலுகிறது. சாதி, மத பேதமற்ற சமத்துவமான நாடாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தத் தேர்தலில் சாதிமத பேதமற்ற திமுக அணியை வெற்றிபெற வைக்க வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சுப்பராயன் எம்பி, "இது தமிழ்நாட்டிற்கான தேர்தல் என்றாலும், மத்திய அரசு தீய செல்வாக்கைப் பயன்படுத்திவருகிறது. பாஜக அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் திமுக கூட்டணிக்குச் சென்றுவிடாமல் பலமுனை போட்டியை பாஜக உருவாக்கியுள்ளது.
சீமான், கமல், ஜாதிய அமைப்புகளைத் தூண்டிவிட்டு தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. இவர்கள் அனைவரது பரப்புரையும் பாஜக அரசுக்கு எதிராக இல்லாமல், திமுகவிற்கு எதிராகவே இருக்கிறது.
தமிழ்நாடு அரசியலில் மய்யம் என்பது இல்லை. ஒன்று இடதுசாரி அல்லது வலது சாரி இரண்டு மட்டுமே, இதற்கு மாறாக நடுநிலை எனக் கூறுபவர்கள் திமுக வெற்றியைத் தடுப்பதற்காகவும், வாக்குகளைப் பிரிப்பதற்காகவுமே போட்டியிடுகின்றனர்.
திமுக, கூட்டணி கட்சிகள் ஒன்றிணைத்து பாஜக வரக் கூடாது என்று இந்தத் தேர்தலில் வெற்றியை நோக்கி நிற்கும்போது, அந்த வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் பாஜக எய்துள்ள ஆயுதம்தான் தமிழ் தேசியம்.
தமிழ் தேசியம் என்பது வேறு - சீமான் முழக்கம் என்பது வேறாக இருக்கிறது. சீமானைத் தவிர தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அனைத்தும் திமுகவைத்தான் ஆதரிக்கிறார்கள்.
கர்நாடகாவில் பாஜக அதிகாரத்தில் உள்ளதால் காவிரிப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் உள்ளனர். எனவே இலவசத் திட்டங்கள் வேண்டாம் எனக் கூற முடியாது. தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 8 மணி என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துக் கொண்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்.
கிராமப்புற மக்கள், நகர்ப்புறம் நோக்கி வராமல் இருக்க கிராமப்புற சிறு, குறு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதேபோல் உழவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்" என்றார்.