இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தலுக்காக தூத்துக்குடியில் வாடகைக்கு எடுத்துள்ள வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கனிமொழியின் வெற்றி உறுதி என்ற நிலையில், அவரது வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையிலும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சாதகமாகவும் வருமான வரித்துறையை, மத்திய பாஜக அரசு ஏவி விடுவது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது அதிகார துஷ்பிரயோகமாகும்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் மீது, மக்கள் மத்தியில் களங்கத்தை உருவாக்குவதற்காக, மோடி அரசு வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது.
எதிர்க் கட்சிகளைத் தேர்தல் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்குடன், வருமான வரித்துறையை மத்திய அரசு பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய பிறகும், மோடி அரசு தொடர்ந்து வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். தேர்தல் ஆணையம் உடனடியாக செயல்பட்டு, மத்திய பாஜக அரசின் அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.