சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முன்னதாக வலியுறுத்தியது.
இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 41 பார்சல்களில், சுமார் நான்கு லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிக் குப்பிகள் சென்னை வந்தடைந்தன. இதனை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் (DMS) வளாகத்தில் உள்ள மாநிலத் தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.