அறிவியல், தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர், ஹைதராபாத்தின் லக்சாய் லைஃப் சயின்சஸ் தனியார் நிறுவனத்திற்கு, கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்சிகைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஹைதராபாத்தில் இயங்கும் சிஎஸ்ஐஆர்- இந்திய ரசாயன தொழில்நுட்பக்கழகம், ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர்- இந்திய ஒருங்கிணைந்த மருந்துக் கழகம் ஆகியவை இந்த முக்கிய மருத்துவ சோதனையில் இணைந்துள்ளன.
இதையடுத்து, கீல்வாதம், அழற்சி சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்தின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு, சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரகத்தின் ஆலோசகரான டாக்டர் ராம் விஷ்வகர்மா, இருதயம் சார்ந்த இணை நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் கால்சிகைன் மருந்தையும் இணைத்து வழங்குவதன் மூலம் கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைவார்கள் என்று கூறினார்.
கரோனாத் தொற்று ஏற்பட்டபோதும், அதற்குப் பிந்தைய காலக் கட்டத்திலும் இருதயம் சார்ந்த பிரச்சனைகளால் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக பல்வேறு சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருப்பதால் புதிய, மறுபயன்பாட்டு மருந்துகளைக் கண்டறிவது அவசியம்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி முகாம்: நகராட்சி ஆணையர் ஆய்வு!