தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றதிற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தாலும், இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் 10 பேரில் இருவர் தம்பதி என்பதுதான்.
10 பேரில் நீதிபதிகள் கே. முரளிசங்கர், எஸ்.டி. தமிழ்செல்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தம்பதி ஆவர்.
இருவரும் 1968ஆம் ஆண்டு பிறந்தவர்கள். சட்டப்படிப்பை முடித்து 1995ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு (நடுவர்) பதவிக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி கே. முரளிசங்கர், 1985-1990ஆம் ஆண்டு கோவை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பை முடித்துவிட்டு, கோவையில் வழக்குரைஞராகப் பணியாற்றிவந்தார். அதேபோல ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த நீதிபதி எஸ்.டி. தமிழ்செல்வி, புதுச்சேரி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
இருவரும் ஒரே நேரத்தில் நீதித்துறை நடுவராகத் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, 1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே. முரளிசங்கரும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதித் துறை பதிவாளராக நீதிபதி எஸ்.டி. தமிழ்செல்வியும் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் சட்டப்படிப்பு படித்துவருகிறார். இந்திய நீதித் துறை வரலாற்றில் கீழழை நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் தம்பதி ஒன்றாக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கிற்கு உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக அரசு நீட்டிற்கு ஏன் போகவில்லை - உதயநிதி ஸ்டாலின் கேள்வி!