சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 31) ஆகஸ்ட் மாதத்திற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அம்மா உணவகம், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் உள்ள காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
மேலும், மண்டலத்திற்கு ஒரு பல் மருத்துவமனை, குப்பைகளை அள்ளும் வண்டிகளைச் சுத்தம் செய்தல், மழைநீர் வடிகாலில் இருக்கும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், "மக்கள் எங்களைக் கேட்கிறார்கள் எப்போது, மழைநீர் வடிகால் பணிகள் முடியும், சாலைப்பணிகள் முடியும் என்று நாங்கள் என்ன பதில் கூறுவது " என்று கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன். "சென்னையில் தற்போது பல இடங்களில் மழைநீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும், சில இடங்களில் அண்மையில் தான் மழைநீர் வடிகால் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகமாக மழைநீர் தேங்கும் இடத்தில் எல்லாம் பருவ மழை தொடங்கும் முன்னதாகவே பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " சென்னையில் தற்போது 8000 சாலைகள் உள்ளன. அதைச் சீர் செய்யும் பணியாது 60% முடிந்துள்ளது. மீத உள்ள சாலைகளில் குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில், மின்சாரத் துறை என பல்வேறு துறைகளின் பணியானது நடைபெற்று வருகிறது. இதையும் விரைவில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
கேள்வி நேரத்தில் பேசிய 58-ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, "கண்ணப்பர் திடல் காப்பகத்தில் இருக்கும் மக்களுக்கு வீடு வேண்டும். மேலும், அவர்களுக்கும் தேசிய வங்கி சார்பில் வீடுகளுக்கான முன் தொகையானது இன்னும் வரவில்லை" என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா. "கண்ணப்பர் திடலில் இருக்கும் மக்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, நேற்றைய (ஆகஸ்ட் 30) கூட்டத்தில் பேசி இருக்கிறோம். மேலும், விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள்!