சென்னை: 2022-23ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் 87,764 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் ’துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர் பட்டபடிப்பு, டிப்ளமோ செவிலியர் படிப்பு, டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்பு, பாராமெடிக்கல் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் ஆகிய மேற்கண்ட படிப்புகளுக்கு 121 அரசு கல்லூரிகளில் 2526 இடங்களுக்கும், 348 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 15,307 இடங்களுக்கு விண்ணப்பங்களும், சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு 58,141 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் ஆண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 15,064ஆகவும், பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 43,077 ஆகும்.
மருந்தாளுநர் பட்டயப்படிப்புகளுக்கு 5206 பேர் தகுதிபெற்றுள்ளனர். ஆண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 1561ஆகவும், பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 3645 ஆகும்.
இந்நிலையில் பாரமெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புப்பிரிவினர்கள் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 22ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
23ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் தேதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும். மாணவர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். பொதுப்பிரிவில் சேர்வதற்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்கள் 10ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு