சென்னை: கோயம்புத்தூர் மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது புகார் எழுந்தது. இதையடுத்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
புகாரில் முகாந்திரம் உள்ளதா?
இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 220 டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிந்துள்ளது.
அதில் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று அப்போதைய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரிக்க வேண்டும்
இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. ஆனால் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதாரங்கள் தாக்கல்
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள், ஆவணங்களைத் தாக்கல்செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, வழக்கு விசாரணை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குற்றச்சாட்டு இல்லை
எஸ்.பி. வேலுமணி சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே அரசு சிறப்பு அலுவலரை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இந்த விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனத் தெரிவித்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வழக்கை விரிவான விசாரணைக்காக நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு நடைமுறை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு