சென்னையில் பத்தாவது மண்டலம், 131ஆவது வட்டத்தில் உள்ள சிவன் பூங்கா, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் ரிங் தற்போது பூட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடத்தில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றால் 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அங்கிருக்கும் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நேற்று (நவ.01) இப்பூங்காவிற்கு வெளியே கையெழுத்து இயக்கப் போராட்டத்தை நடத்தினர்.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி பொறுப்பாளர் சந்துரு கூறுகையில், "நாங்கள் முதலில் ’நம்ம சென்னை செயலி’ மூலம் புகார் அளித்தோம். பின் நேரில் உதவிப்பொறியாளரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அப்போது அவர் ஒரு டெண்டர் அறிக்கையை எங்களிடம் காட்டினார்.
அதில் சென்னையில் உள்ள 10 பூங்காக்களில் உள்ள ஸ்கேட்டிங் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு ஏழு லட்ச ரூபாய் என்ற வீதத்தில் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது தெரியவந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்தே தனியார் நிறுவனம் இப்பூங்காக்களை ஏலம் எடுத்துள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கேட்டால் நிதிப் பற்றாக்குறை என மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போதுதான் 350 கோடி ரூபாயை வரியாக மாநகராட்சி வசூலித்துள்ளது.
மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்துப் பூங்காக்களையும் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மேலும், நாங்கள் பெற்ற கையெழுத்துகளையும் முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம்" என்றார்.
இதையும் படிங்க: 'மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு தனி இட ஒதுக்கீடு அல்ல'- வில்சன் திமுக எம்பி