சென்னை: சென்னையில் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கரோனா பரவல் படிப்படியாக குறைந்து தற்போது நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 300 நபர்கள் மட்டுமே பாதிக்கப்படும் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும் கரோனா பரவல் விகிதம் 0.88 விழுக்காடாக உள்ளது.
இந்நிலையில், பொதுமக்களிடம் கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிய செரோ சர்வே எனப்படும் 'குருதி சார் அளவீடு' ஆய்வுக்காக திங்கள் முதல் மாதிரிகள் சேகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே ICMR வழிகாட்டு நெறிமுறைகளின்படி சென்னை மாநகராட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக செரோ சர்வே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
கரோனா இரண்டாம் அலையை ஒட்டி, தற்போது ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின்படி எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது எனக் கண்டறிந்து நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை, அங்கு தீவிரப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் முன்களப்பணியாளர்கள், பணிக்குச் செல்லும் மக்கள் என தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 51 வார்டுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியும்போது செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை