கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு மருந்துகளையும் கரோனாக்கு தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.இந்த தடுப்பூசிகள் முதலில் சுகாதாரத்துறையில் பணியாற்றிய நபர்களுக்கு செலுத்தப்பட்டது. மக்களுக்கு நம்பிக்கை தரவேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக முன்களப்பணியாளர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஏறத்தாழ 20 ஆயிரம் பணியாளர்களுக்கு நேற்று (பிப்.1) முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த பணியினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (பிப்.2) நேரில் சென்று ஆய்வு செய்தார். தண்டயார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது துணையாணையர் திவ்யதர்ஷினி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட பல அலுவலர்கள் உடன் இருந்தனர்.