சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அரும்பாக்கம் பகுதியில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆயிஷா என்ற சிறுமியை தெருவில் சுற்றிய மாடுமுட்டி தள்ளியது. இந்த சம்பவம் சென்னையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தெருவில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டியது. அதன் பிறகு, 3 ஆயிரத்து 700 மாடுகளுக்கும் மேல் பிடிக்கபட்டு மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் போடப்பட்டது.
இது போன்று கடந்த அக்டோபர் 18-ந் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டித் தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அதிகாரி தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று(அக்-25) இதே திருவல்லிக்கேனி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கஸ்தூரி ரங்கன் என்ற முதியவர் மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் முதியவர் கஸ்தூரி ரங்கனுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், "மாட்டின் உரிமையாளர்கள், நாங்கள் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். எங்களின் பிரச்னையே தெருவில் திரியும் மாடுகள் தான். சென்னையில், தற்போது 3- முறை தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. மேலும், மாநகராட்சி பகுதியில், 15- வண்டிகளில், நாங்கள் மாடுகளை பிடித்து வருகிறோம்.
மேலும் சிலர் மாடு பிடிக்கும் வண்டி வரும் சமயத்தில் மட்டும் மாடுகளை கட்டி வைக்கிறார்கள். எங்களுக்கு காவல் துறையில் இருந்து முழு விவர அறிக்கை ஒன்று அவர்கள் அளித்துள்ள்னர். அதன் படி, பூக்கடை பகுதியில் 120, வண்ணாரப்பேட்டை பகுதியில், 3, புளியந்தோப்பில் 48, அண்ணாநகரில் 269, கொளத்தூரில் 12, கோயம்பேட்டில் 513, திருவல்லிகேனி, மயிலாப்பூரில், 367, கிழ்பாக்கத்தில் 95, அடையாற்றில் 177, தி.நகரில் 145, செயிண்ட் தாமஸ் மலையில் 247 என ஆயிரத்து 986 மாடுகள் எங்கெங்கு உள்ளன என்று முகவரி உடன் காவல் துறைஅறிக்கை கொடுத்துள்ளது.
ஒரு மாடு முட்டினால், நாம் மாட்டை குறை சொல்ல முடியாது. அந்த உரிமையாளர் தான் அதற்கு பொறுப்பு. கொடுங்கையூரில் இடம் கொடுத்தால் கூட இவர்கள் போவார்களா என்று சந்தேகம் உள்ளது. அதிகாரிகளை மிரட்டுவது, வண்டி வரும் போது, மாடுகளை கட்டிவைப்பது, போன்ற செயல்கள் இருக்க கூடாது. மேலும் மாடுகளுக்கு உணவு கொடுப்பதும், அகத்திகீரை கொடுப்பதும் நல்ல காரியம் தான். அதை நல்ல காரியம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அவற்றை தத்து எடுப்பதும் ஒரு நல்ல காரியம் என்று எண்ணி செயல்படுங்கள். மேலும் மாட்டு உரிமையாளர், பொதுமக்கள் சிந்தித்து பார்த்தால் மட்டும் தான் இதற்கு தீர்வு ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வெள்ளை மாளிகை தேசிய விருது!